தமிழக அரசியலில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், அரை நூற்றாண்டு கால அரசியலை உடைத்தெறிந்து, விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஆட்சி அமைத்தது.
கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், வெற்றிகரமாக தனது 100 நாட்கள் (TVK 100 Days) ஆட்சியை நிறைவு செய்துள்ளார். மாநிலத்தின் புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்தில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்துள்ளது
ஆட்சியின் தொடக்கத்திலேயே முக்கிய அறிவிப்புகள்
பதவியேற்ற உடனேயே முதலமைச்சர் விஜய் சில முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அதில் குறிப்பிடத்தக்கது.
பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை அமைப்பதற்கும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 65 தனிப்பிரிவுகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம்
குறு விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பும் வெளியானது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனிலும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், திருமண உதவித் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டு ஆடை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குடிசைப் பகுதிகளை மாற்றி 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டுதல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள் வழங்குதல், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
முதலீடுகளை ஈர்க்கும் முயற்சி
தவெக அரசின் 100 நாள் செயல்பாடுகளில் தொழில் முதலீடுகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.
முதல் 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அரசு கூறியுள்ளது.
‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 23 மாவட்டங்களில் சுமார் 1.07 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு குறித்து விமர்சனங்கள்
அரசு தனது முதல் 100 நாட்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளை சாதனைகளாக முன்னிறுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.
சட்டம்-ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், மின்சாரத் தடை, குப்பை மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும், அரசின் புதிய அமைச்சர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இனி வரும் காலம்தான் முக்கியம்!
முதல் 100 நாட்களில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருப்பதுடன், முதலீடுகளை ஈர்ப்பதிலும் தவெக அரசு கவனம் செலுத்தியுள்ளது.
ஆனால், அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களை சென்றடைகின்றன, முதலீட்டு ஒப்பந்தங்கள் எவ்வளவு விரைவாக தொழில் திட்டங்களாக மாறுகின்றன, அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வேலைவாய்ப்புகள் உருவாகின்றனவா என்பதுதான் அடுத்தகட்டத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக இருக்கும்.
எனவே, முதல் 100 நாட்களை ஒரு தொடக்க கட்டமாக மட்டுமே பார்க்க முடியும். இந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதிலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதிலும் தவெக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதே அதன் ஆட்சியின் அடுத்த கட்டத்துக்கான முக்கிய அளவுகோலாக அமையும்.

