தமிழ் திரைப்படத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய சர்ச்சைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது.புதிய படங்களின் வெளியீட்டை நிறுத்துவதுடன், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
8 வார ஓடிடி விதியே முக்கிய காரணம்
இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக ஓடிடி வெளியீடு தொடர்பான 8 வார கால நிபந்தனை கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை குறைந்தபட்சம் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விதிமுறையை தயாரிப்பாளர்கள் எழுத்துப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு உறுதிமொழி வழங்கினால் மட்டுமே புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிட அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Producers’ Council எதிர்ப்பு
தங்களுடன் உரிய ஆலோசனை நடத்தாமல் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவின் பிற மாநிலங்களில் இதுபோன்ற 8 வார ஓடிடி கட்டுப்பாடு நடைமுறையில் இல்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த விதியை கட்டாயப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியும் காரணம்
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 250 திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், அவற்றில் பெரும்பாலான படங்கள் எதிர்பார்த்த வருவாயை ஈட்ட முடியாமல் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வரும் தயாரிப்பாளர்களுக்கு புதிய OTT நிபந்தனை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு தயாரிப்பாளர்கள் கோரிக்கை
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, திரைப்படத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் 1 முதல் புதிய படங்களின் வெளியீடு, படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறுத்தும் முடிவு அமலுக்கு வந்தால், தமிழ் சினிமா மட்டுமின்றி அதனைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் பிற துறையினரிடமும் தாக்கம் ஏற்படும் சூழல் உருவாகலாம்.

