Sowcar Janaki: தென்னிந்திய சினிமாவின் பல தலைமுறைகளை கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சௌகார் ஜானகி (94) சென்னையில் இன்று காலமானார்.
மருத்துவமனையில் சிகிச்சை
வயது மூப்பு காரணமான உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு செய்தியை நடிகர் சங்கத் தலைவர் நாசர் உறுதிப்படுத்தியுள்ளார்.
1950-ல் தொடங்கிய திரைப்பயணம்
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சௌகார் ஜானகி, 1950-ம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘சௌகாரு’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தின் பெயரே பின்னர் அவரது திரைப்பெயராக மாறியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அவர் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.
முன்னணி நடிகர்களுடன் பயணம்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலருடன் சௌகார் ஜானகி இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக கே. பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்களில் அவரது மாறுபட்ட நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
‘பார் மகளே பார்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லுமுல்லு’ போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், சௌகார் ஜானகிக்கு திரையுலகில் தனி அடையாளத்தையும் பெரும் புகழையும் பெற்றுத் தந்தன.
கதாநாயகி, குணச்சித்திர நடிகை, நகைச்சுவை வேடம் என கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது நடிப்பை மாற்றிக்கொண்டது அவரது தனிச்சிறப்பாக பார்க்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கும் மேலான கலைப்பயணத்தில் சுமார் 400 படங்களில் அவர் நடித்துள்ளார்.
விருதுகளால் அங்கீகாரம்
திரையுலகில் அவர் ஆற்றிய நீண்டகால பங்களிப்புக்கு கலைமாமணி உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
சௌகார் ஜானகியின் மறைவு தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

