நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி, ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் யாஷ் கலந்து கொண்டு பேசினார்.
இளைஞர்களுக்கு யாஷ் அறிவுரை
நிகழ்ச்சியில் பேசிய யாஷ், இந்திய சினிமாவை உலக அளவில் மேலும் உயர்த்துவதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சினிமாவை அளவுக்கு அதிகமாக தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், வாழ்க்கையில் தாங்கள் எதை சாதிக்க விரும்புகிறார்களோ அதை இலக்காக வைத்து கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டால் அதற்காக மற்றவர்களையோ, இந்த உலகத்தையோ குறை கூறாமல், தங்களது தவறுகளை உணர்ந்து முன்னேற வேண்டும் என்றும் யாஷ் கூறினார்.
“வடக்கு, தெற்கு என பிரிவுகள் வேண்டாம்”
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும், தனித்தனி மொழிகளும் இருப்பதை குறிப்பிட்ட யாஷ், ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழியை நேசிப்பது இயல்பானது என்றார்.
All you Girls, you’ll have a blast! 😉💥#ToxicTheMovie #ToxicOn26thAug pic.twitter.com/J3c7plwVlm
— TOXIC (@Toxic_themovie) August 23, 2026
ஆனால், தற்போதைய சூழலில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்களைப் பிரித்து அரசியல் செய்ய நினைப்பவர்களின் பேச்சை இளைஞர்கள் கேட்கக் கூடாது. என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், வடக்கு, தெற்கு என நாட்டை பிரித்துப் பார்க்க வேண்டாம் என்றும், இளைஞர்கள் தங்களது திறமையாலும் உழைப்பாலும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வெற்றி பெற முடியும் என்றும் யாஷ் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 26-ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்
கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் யாஷுடன் ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா, நயன்தாரா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் யாஷ் பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

