நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ (Jana Nayagan) திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை ஜீ5 தமிழ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. அதில், “தங்கமே, தளபதி, ஜனநாயகன் ஆகஸ்ட் 21-ம் தேதி ஜீ5-ல் உங்களைச் சந்திக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனம் ஈர்த்த அறிவிப்பு வீடியோ
அறிவிப்பு வீடியோவில், பிரம்மாண்டமான வீட்டில் இருந்து ஜீப் ஒன்று புறப்படுகிறது. கூவம் மற்றும் நேப்பியர் பாலம் வழியாக செல்லும் அந்த ஜீப்பை விஜய் ஓட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜீப் வேகமாக செல்லும்போது, அதன் பக்கக் கண்ணாடியில் விஜய்யின் முந்தைய திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் மாறிமாறி தோன்றுகின்றன. இறுதியில் தலைமைச் செயலகம் முன்பு ஜீப் நிற்க, அங்கிருந்து விஜய் நடந்து வரும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
பல தடைகளை கடந்து வெளியான ‘ஜனநாயகன்’
கடந்த பொங்கலையொட்டி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், சென்சார் தொடர்பான சிக்கல், இணையத்தில் படம் கசிந்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. இதையடுத்து, ஜூலை 23-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விஜய்யின் கடைசி திரைப்படம்
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பயணித்த விஜய், ‘ஜனநாயகன்’ தனது கடைசி திரைப்படம் என ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு தற்போது ஓடிடி ரிலீஸுக்கான தேதியும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஆகஸ்ட் 21 முதல் ஜீ5 தளத்தில் காணலாம்.

