நான்கு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியுள்ள நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது, குறிப்பாக சட்டம் – ஒழுங்கு விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாணவர்கள் கொலை விவகாரத்தில் பரபரப்பு
கோவையைச் சேர்ந்த மாணவர் அமுதன் மற்றும் தனுஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு தவெக அமைச்சர்கள் பதிலளித்த நிலையில், அவையில் விவாதம் பரபரப்பானது.
கலைஞர் குறித்து அமைச்சர் பேச்சு
இதனிடையே, மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசியது திமுக உறுப்பினர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் தனது உரையில், கலைஞர் கருணாநிதி குறித்து அடுக்குமொழியில் பேசியதாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர் சார்பாக நான் சாரி கேட்கிறேன் – முதல்வர் விஜய்
இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் ரஞ்சித் குமாரின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கோரினார். உங்கள் தலைவருடைய பெயரை குறிப்பிட்டு பேசியது தவறுதான். அவர் சார்பாக நான் சாரி கேட்டுக்கொள்கிறேன்” என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
அமைச்சரின் பேச்சைத் தொடர்ந்து முதல்வர் நேரடியாக மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

