Happy 387th Birthday Chennai : தமிழகத்தின் தலைநகரமும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமுமான சென்னை இன்று தனது 387-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
மதராசப்பட்டணம் முதல் நவீன சென்னை வரை
1639 ஆகஸ்ட் 22-ல் கிழக்கிந்திய கம்பெனி நில ஒப்பந்தம் செய்த தினமே, 2004 முதல் ‘சென்னை தினமாக’க் கொண்டாடப்பட்டு வருகிறது. மதராசப்பட்டணத்தில் தொடங்கி இன்று அதிநவீன பெருநகரமாக வளர்ந்துள்ள சென்னை, அனைவரையும் வாழவைக்கும் ஒரு வளர்ப்பு அன்னையாகத் திகழ்கிறது. ஆனால், பெருமைமிகு இந்த வளர்ச்சிக்கு பின்னே பல சவால்களும் சூழ்ந்துள்ளன.
நீர்நிலைகள் சீர்கேடு
ஒருகாலத்தில் நகரின் தாகம் தணித்த கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்கள் இன்று கழிவுநீர் செல்லும் பாதைகளாக மாறியுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், குடிநீருக்காக லாரிகளை நம்பியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
பருவநிலை சவால்
மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு, கோடையில் தீவிர தண்ணீர் பற்றாக்குறை என இரு முனைகளில் நகரம் தவிக்கிறது. மேலும் அதிகப்படியான வாகனங்கள் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பும் சென்னையில் அதிகரித்து வருகிறது. வெறும் வரலாற்று பெருமைகளைப் பேசுவதோடு நின்றுவிடாமல், சென்னையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி
நீர்நிலைகளை கழிவுநீரில் இருந்து மீட்டுத் தூய்மைப்படுத்துவது, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது, சுற்றுச்சூழலைப் பேணுவது ஆகியவற்றில் நாம் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
சென்னையை வெறும் பொருளாதார மையமாக மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறையும் பாதுகாப்பாக வாழக்கூடிய பசுமையான நகரமாக மாற்றி ஒப்படைப்பதே இந்த 387-வது பிறந்தநாளில் நாம் ஏற்கும் சிறந்த உறுதிமொழியாகும்.
முதலமைச்சர் விஜய் வாழ்த்து
சென்னை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் கூறியிருப்பதாவது
வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!
வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.
சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம். அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம்.
வளரட்டும் சென்னைப் பெருநகரம்!
உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

