சென்னையின் முக்கியமான பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஒன்றான பறக்கும் ரயில் (Parakkum Rail) எனப்படும் எம்.ஆர்.டி.எஸ். (MRTS) வழித்தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் பறக்கும் ரயில் சேவையிலும் மெட்ரோவுக்கு இணையான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோவுடன் இணையும் எம்.ஆர்.டி.எஸ்.
பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ நிர்வாகத்துடன் ஒருங்கிணைப்பதற்கான அதிகாரப்பூர்வ வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசு இடையே கையெழுத்தாகியுள்ளது. தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் எம்.ஆர்.டி.எஸ். சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை 19 கி.மீ. தொலைவுக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.
பின்னர் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான நீட்டிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த வழித்தடம் நடப்பாண்டு மார்ச் 15-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது மொத்தம் 23.98 கி.மீ. தொலைவுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் ஒரு லட்சம் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
90 நாட்களில் ஒப்படைப்பு
பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, எம்.ஆர்.டி.எஸ். சேவையை மெட்ரோ நிர்வாகத்துடன் இணைப்பதற்கான திட்டத்துக்கு ரயில்வே வாரியம் கடந்த 2025 ஜூலை 31-ம் தேதி கொள்கை அளவில் முதற்கட்ட ஒப்புதலை வழங்கியது.
தற்போது ரயில்வே அமைச்சகத்தின் இறுதி ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், தெற்கு ரயில்வே தனது சொத்துகள், பொதுவான செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை 90 நாட்களுக்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க உள்ளது. எனினும், ரயில் இயக்கம் மற்றும் முக்கிய பராமரிப்புப் பணிகள் இதில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, பறக்கும் ரயில் வழித்தடத்திலும் மெட்ரோ ரயிலுக்கு இணையான பயணிகள் வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

