இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒரு கைதியின் டைரி (Oru Kaithiyin Diary) ’. இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். பாரதியாரின் “ரௌத்திரம் பழகு, மானிடனே” என்ற வரிகளுடன் தொடங்கும் மோஷன் போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கிரைம் த்ரில்லர் பின்னணியில் கதை
மதுரை நகரை பின்னணியாகக் கொண்ட காட்சிகளுடன், 2001-ம் ஆண்டைச் சேர்ந்த டைரி, வரைபடக் குறிப்புகள், பதிவு அலுவலகத்திற்கு வெளியே நடைபெறும் அரிவாள் தாக்குதல் மற்றும் தூக்கு மேடை போன்ற காட்சிகள் மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் படம் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
காவல்துறை அதிகாரியாக சாந்தனு
Oru Kaithiyin Diary படத்தில் சாந்தனு பாக்யராஜ் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சீமான் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

