கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் ரூ.75,000 வரையிலான கடன் (Crop loan) முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை வெளியிட்ட முதல்வர், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த கூடுதல் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவித்தார்.
ஏற்கெனவே ரூ.5,932 கோடி கடன் தள்ளுபடி
தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற 15 நாட்களுக்குள், குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் (Crop Loan) ரூ.50,000 வரையிலான தொகையை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டதாக முதல்வர் கூறினார்.
பின்னர் விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலித்து, ரூ.75,000 வரை கடன் (Crop Loan) பெற்றவர்களுக்கு முழுத் தொகையும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரையும் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டது. இதில், ஜூலை 31-ம் தேதி வரை ரூ.5,267 கோடி விடுவிக்கப்பட்டு, 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கடன் தள்ளுபடி அறிவிப்பு
விவசாய சங்கங்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 7-ம் தேதி விவசாய சங்க பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார்.
ரூ.75,000 வரை பெற்ற பயிர்க்கடன் – 100% முழுமையாக தள்ளுபடி
ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெற்ற கடன் – அதிகபட்சம் ரூ.75,000 வரை தள்ளுபடி
ரூ.1 லட்சத்துக்கு மேல் பெற்ற கடன் – அதிகபட்சம் ரூ.35,000 வரை தள்ளுபடி
2.38 லட்சம் விவசாயிகளுக்கு கூடுதல் பயன்
ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகள், தலா ரூ.75,000 வரை தள்ளுபடி பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட தள்ளுபடிக்கு மேலாக, சில விவசாயிகளுக்கு ரூ.40,000 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும்.
ரூ.6,220 கோடி வரை மொத்த தள்ளுபடி
புதிய அறிவிப்பால் அரசுக்கு சுமார் ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என முதல்வர் தெரிவித்தார். நிதி நெருக்கடி இருந்தபோதிலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.6,220 கோடி பயிர்க்கடன் (Crop Loan) தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.


Hi