தமிழகத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ (El nino) தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் மழை, வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி கேள்வி எழுப்பினார்.
திருப்புகழ் கமிட்டி அறிக்கை என்ன ஆனது?
பேரிடர் மேலாண்மை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய சவுமியா அன்புமணி, கடந்த கால வெள்ளப் பாதிப்புகளை சுட்டிக்காட்டி, திருப்புகழ் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைகள் குறித்து அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
2021-ம் ஆண்டு அக்டோபரில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு, பேரிடர் மேலாண்மை தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்தக் குழு 2023 மார்ச் மாதத்தில் சுமார் 600 பக்க அறிக்கையை தாக்கல் செய்ததாகவும் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் பேரிடர் பாதிப்புகளுக்கான காரணங்கள், தீர்வுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தாலும், அது இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு முழுமையாக வெளியிடப்படவில்லை என சவுமியா அன்புமணி கூறினார்.
எல் நினோவை எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும்”
எல் நினோ (El nino) தாக்கம் ஏற்படக்கூடிய சூழலில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் அரசு முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்படாத வகையில் நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும், மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மீண்டும் காலநிலை அகதிகளாகிவிடக் கூடாது
பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆகிய துறைகள் இணைந்து மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.
போர் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதைப் போல, சென்னையில் காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகக்கூடாது” என அவர் வலியுறுத்தினார்.
7 பேர் குழு அமைப்பு – செங்கோட்டையன் விளக்கம்
இதற்கு பதிலளித்த அவை முன்னவர் செங்கோட்டையன், திருப்புகழ் கமிட்டியை முன்னாள் ஆட்சியாளர்கள் அமைத்து ஓராண்டு காலம் பணியாற்றியதாக தெரிவித்தார். அந்தக் குழுவின் அறிக்கை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான போதிலும், அது முழுமையாக வெளியிடப்படாதது ஆச்சரியமளிப்பதாகவும் கூறினார்.
தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பேரிடர் மேலாண்மை கூடுதல் ஆணையர் முருகானந்தம் ஐஏஎஸ் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய குழுவை அமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன
புதிய குழு 15 நாட்களுக்கு முன்பு கூடி ஆலோசனை நடத்தியதாகவும், பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.
அதன்படி, முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் தடுப்பு பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

