தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பங்கேற்று, தமிழகத்தின் நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு
இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரிய சொத்துகளில் ஒன்றான நீர்வளம் படிப்படியாக அழிந்து வருவதாக வேதனை தெரிவித்த அவர், நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். சென்னையில் பல நீர்நிலைகள் காணாமல் போயுள்ளதாகவும், ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் சௌமியா அன்புமணி சுட்டிக்காட்டினார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற இயற்கை வளங்கள் மழைநீரைச் சேமிப்பதிலும் வெள்ளத்தைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய பகுதிகளை பாதுகாப்பது அவசியம் என்றார்.
கூவம் ஆற்றில் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள கூவம் ஆறு, சென்னையை நோக்கி வரும்போது பல்வேறு கழிவுகள் கலப்பதால் சாக்கடையாக மாறுவதாக அவர் தெரிவித்தார். ஆற்றை அழகுபடுத்துவதற்கு முன்பாக, அதில் கழிவுகள் கலப்பதைத் தடுத்து, நீரின் தரத்தை மீட்டெடுப்பதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தாமிரபரணி ஆற்றில் டன் கணக்கில் குப்பைகள்
தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான தாமிரபரணியின் நிலை குறித்தும் சௌமியா அன்புமணி கவலை தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றில் டன் கணக்கில் குப்பைகள் தேங்கியுள்ளதாகவும், முதலில் ஆற்றை தூய்மைப்படுத்தாமல் அதனை அழகுபடுத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆறுகள், ஏரிகளை தூர்வார வேண்டும்
தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களை முறையாக தூர்வாரினால், மாநிலத்தின் நீர்த்தேக்கத் திறனை அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நீர்நிலைகளை மேப்பிங் செய்ய வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை முறையாக அளவிட்டு, அவற்றை முழுமையாக மேப்பிங் செய்ய வேண்டும் என்றும் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். மேலும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறையை மீண்டும் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
மேப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன – அமைச்சர்
சௌமியா அன்புமணியின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை மேப்பிங் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

