தமிழக சட்டசபையில் ரேஷன் அரிசி தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை என்றும், சிலர் அதனை ஆடு, கோழிகளுக்கு பயன்படுத்துவதாகவும் அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தியது.
சட்டசபையில் ரேஷன் அரிசி குறித்து விவாதம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் நேரமில்லா நேரம் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கேள்வி நேரம் நடைபெறவில்லை. இதையடுத்து சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பின்னர் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
நெல்லை பாதுகாத்தோம்” – திமுக எம்எல்ஏ
விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்களது ஆட்சிக் காலத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், நெல் முளைப்பதைத் தடுத்து, தரமான முறையில் அரிசியைப் பெற்று பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செங்கோட்டையன் பேச்சுக்கு எதிர்ப்பு
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “ரேஷன் கடை அரிசியை ஆடு, கோழிகளுக்குத்தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தார். அவரது இந்தக் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது கருத்தை விளக்கிய அமைச்சர், “நீங்கள் கூறியதன் அடிப்படையில்தான் நான் கூறினேன்” என்று தெரிவித்தார்.
சன்ன ரக நெல் உற்பத்தி குறித்து விளக்கம்
தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தி போதுமான அளவில் இல்லை என்றும், இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து அந்த வகை நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கான கூலியை முதலமைச்சர் உயர்த்தயுள்ளதாகவும், இந்த ரக நெல் உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை சிலர் பயன்படுத்துவதில்லை என்பதே தனது கருத்து என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

