முதல்-மந்திரிகள் மாநாடு: காவிரி, நீட், முல்லைப் பெரியாறு குறித்து முதல்வர் விஜய் வலியுறுத்தல்

Council Meet

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம் (Council Meet) இன்று கோவளத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன், தெலங்கானா துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

தென் மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, மாநிலங்களின் பொதுவான பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தென் மாநிலங்களின் நலன் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

காவிரி நீர் விவகாரம்

காவிரி நீர் தொடர்பான பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மதித்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தினார். கீழ்நிலை நீர்ப்பிடிப்பு மாநிலங்களின் சட்டபூர்வ உரிமைகளும், மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நதிநீர் பிரச்சினைகளை பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் ஆதாரங்கள் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் அணுக வேண்டும் என்றும், நதிநீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளின் முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு

மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் விஜய் தெரிவித்தார். இதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அவர் வலியுறுத்தினார்.

தொகுதி மறுவரையறை

தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாது என்பதற்கான சட்டபூர்வ உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார். எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில் இதற்கான உறுதி அளிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் தடுப்பு

போதைப் பொருட்களின் ஆன்லைன் விற்பனையைத் தடுக்க சட்ட விதிகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும், தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையே உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றும் தெரிவித்தார்.

தென் மாநிலங்களின் வளர்ச்சி

தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்த தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார். கர்நாடகாவின் பொம்மச்சந்திரா முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பது சிறந்த உள்கட்டமைப்பு திட்டமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் தென் மாநிலங்கள் சுமார் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. எனவே தென் மாநிலங்களின் வளர்ச்சி, முதலீடு மற்றும் செயல்திறனை கருத்தில் கொண்டு நியாயமான நிதிப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஜிஎஸ்டி தொடர்பான வரம்புகளை நிர்ணயிப்பதில் மாநிலங்களுக்கு தேவையான நெகிழ்வுத்தன்மையை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

1 Comment

உங்கள் கருத்து?

Related Posts