வழிபாட்டுத் தலங்களில் பாகுபாட்டுக்கு இடமில்லை: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

No Discrimination

இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம் என்பதால், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களிடையே எந்தவிதமான பாகுபாடும் காட்டக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் கோயில் தொடர்பான வழக்கு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில், பிராமணர் அல்லாத தென்கலை வைணவ பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி மாதவன் ராமானுஜ தாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும், பிராமணர் அல்லாத பக்தர்கள் பிரதான வாசல் வழியாக சன்னதிக்குள் செல்ல அனுமதிக்கப்படாமல், பக்கவாட்டு வாசல் வழியாக அனுப்பப்படுவதாகவும், நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

கோயில் நிர்வாகம் அளித்த விளக்கம்

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் சன்னதிகள் குறுகிய இடவசதி கொண்டவை என்றும், சேவா காலங்களில் முறைதாரர்களுக்கே முழுமையாக நிற்க இடமில்லாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இதன் காரணமாகவே குறிப்பிட்ட நேரங்களில் பொதுப் பக்தர்கள் சன்னதிக்கு வெளியே நிறுத்தப்படுவதாகவும், இதில் சாதி அடிப்படையிலான எந்தப் பாகுபாடும் இல்லை என்றும் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்தது.

 பக்தர்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என உத்தரவாதம்

குறிப்பிட்ட சேவா நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பொதுப் பக்தர்கள் சன்னதிகளில் திவ்யப் பிரபந்தம் பாடி வழிபட எந்தத் தடையும் இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்தது. மேலும், திருக்கோயிலில் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கும்போது அனைத்து பக்தர்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும், எந்தவித பாகுபாடும் காட்டப்படாது என்றும் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

வழிபாட்டுத் தலங்களில் பாகுபாடு கூடாது

கோயில் நிர்வாகத்தின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் சமமானவர்கள் என்பதை சுட்டிக்காட்டினர். இறைவன் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்ற பகவத் கீதையின் கருத்தை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், *வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை* என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை கோயில் நிர்வாகம் முறையாகவும் உறுதியாகவும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts