கரூர் சம்பவம்: அரசு வேலை நியமனங்களை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

Govt job

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசு வேலை (Govt Job) நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நடவடிக்கையாக அரசு வேலை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி, தகுதியான குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அரசின் இந்த முடிவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கியது அரசியலமைப்பின் 14 மற்றும் 16-வது பிரிவுகளுக்கு எதிரானது எனக் கூறி, அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தது.மேலும், அரசுத் துறைகளில் ஏற்கனவே கருணை அடிப்படையிலான வேலைக்காக பலர் காத்திருக்கும் நிலையில், அவர்களின் உரிமைகளைப் புறக்கணித்து குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டும் வேலை வழங்குவது சரியான நடைமுறை அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஜே.பி. பார்த்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதில் என்ன பிரச்சினை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஒரு குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்தவர் உயிரிழந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மகன் அல்லது மகளுக்கு அரசு வேலை வழங்குவது நிவாரண நடவடிக்கையாக இருக்கக்கூடாதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

துயரச் சம்பவத்தில் அரசியல் வேண்டாம்

விசாரணையின்போது எதிர்தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் அரசியல் மற்றும் நலன் முரண்பாடு இருப்பதாக வாதிட்டார். இதற்கு நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசியலை கொண்டு வர வேண்டாம் என்றும், இது ஒரு துயரச் சம்பவம் என்றும் அறிவுறுத்தினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை நியமனங்களை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பினரும் விரிவான பதில்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

இதன் மூலம், உயர்நீதிமன்ற உத்தரவால் ரத்து செய்யப்பட்டிருந்த கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அரசு வேலை நியமனங்களுக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால் தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.

 

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts