ஃபார்ச்சூன் சமையல் (Fortune Oil) எண்ணெய் நிறுவனத்திற்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அபராதம்: வைட்டமின் குறைபாடு கண்டறியப்பட்டதால் நடவடிக்கை.
இந்தியாவில் முன்னணி சமையல் எண்ணெய் பிராண்டான ‘ஃபார்ச்சூன்’ பொருட்களை உற்பத்தி செய்து வரும் ‘ஏடபிள்யூஎல் அக்ரி பிசினஸ்’ (AWL Agri Business Ltd) நிறுவனத்திற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
Fortune Oil நிறுவனம் மீது நடவடிக்கை
ஊட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்ட எண்ணெய் என விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சமையல் எண்ணெயில், போதிய அளவில் வைட்டமின் சத்துக்கள் இல்லாததே இந்த நடவடிக்கைக்கான முக்கியக் காரணம் எ்ன்று கூறப்பட்டுள்ளது.
மாதிரி பரிசோதனையில் வெளிவந்த உண்மை
கோவாவில் இயங்கி வரும் பிரபல ‘தாஜ் ஃபார்ட் அகுவாடா ரிசார்ட்’ விடுதியில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போது, கர்நாடக மாநிலம் மங்களூரு ஆலையில் தயாரிக்கப்பட்ட ‘ஃபார்ச்சூன் ஃப்ரையோலா’ (Fortune Fryola) சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்யின் மாதிரி சேகரிக்கப்பட்டது.
அந்த மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டதில், 2018-ஆம் ஆண்டின் உணவுச் செறிவூட்டல் விதிகளின்படி இருக்க வேண்டிய வைட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் ‘டி’ ஆகியவற்றின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவாக இருந்தது உறுதியானது. இதனையடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் இந்த எண்ணெய் “தரம் குறைந்தது” (Substandard) என வகைப்படுத்தப்பட்டது.

மேல்முறையீட்டிலும் தோல்வி
ஆய்வக அறிக்கையை எதிர்த்து அகமதாபாத்தைச் சேர்ந்த AWL அக்ரி பிசினஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, அந்த மாதிரி மத்திய பரிந்துரை ஆய்வகத்திற்கு (Referral Laboratory) மீண்டும் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
எனினும், மறுசீராய்விலும் அந்த எண்ணெயில் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டிய வைட்டமின் ‘டி’ அளவு குறைவாகவே இருப்பது மீண்டும் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, கோவா தீர்ப்பு அதிகாரி மூலமாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, AWL நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையின் விவரத்தை FSSAI அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடவில்லை.
நிறுவனம் அளித்துள்ள விளக்கம்
இந்த விவகாரம் குறித்து AWL அக்ரி பிசினஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில்:
“இது நுகர்வோரின் உடல்நலம் அல்லது பாதுகாப்பு சார்ந்த பிரச்சனை கிடையாது. சமையல் எண்ணெயில் சேர்க்கப்படும் செயற்கை வைட்டமின்கள், வெப்பம், வெளிச்சம் மற்றும் சேமிப்பு காலம் காரணமாகக் காலப்போக்கில் குறைய வாய்ப்புள்ளது. தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அடுத்தகட்ட சட்டப்பூர்வ மேல்முறையீட்டை மேற்கொள்வோம்.” என்று AWL அக்ரி பிசினஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக உணவுப் பொருட்களின் தரம் மற்றும் போலியான விளம்பரங்கள் மீது FSSAI தீவிர கண்காணிப்பு செலுத்தி வரும் நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை நுகர்வோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

