இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தை (Independence Day) ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்திய தேசியக் கொடியை ஏந்தி இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய விண்வெளி வீரர் பியோட்ர் டுப்ரோவ் தனது சமூக வலைதளப் பதிவில், இந்திய மக்களுக்கு அமைதி, வளம் கிடைக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற இந்தியா, தன்னிறைவு மற்றும் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ரஷ்ய விண்வெளி வீரரான ஆண்ட்ரே ஃபெத்தியாயேவ், இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி “இந்தியா–ரஷ்யா நட்பு நீடூழி வாழ்க” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா தொடர்ந்து அமைதி, வளம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் வாழ்த்தியுள்ளனர்.
யூரி ககாரினை நினைவுகூர்ந்த ரஷ்ய வீரர்கள்
இந்த ஆண்டு, சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் மனிதகுலத்தின் முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டதன் 65-வது ஆண்டு நிறைவாகும். இதையும் தங்களது வாழ்த்துச் செய்தியில் ரஷ்ய விண்வெளி வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1961-ம் ஆண்டு நவம்பர் மாதம் யூரி ககாரின் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம், சோவியத் ஒன்றியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தியது.
இந்தியாவைப் பற்றி ககாரின் தெரிவித்த கருத்துகளையும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா அழகாகத் தெரிந்ததாகவும், பூமியில் இருந்து பார்க்கும்போது அதைவிட அழகாக இருப்பதாகவும் ககாரின் கூறியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், “உண்மையான நண்பர்கள் வசிக்கும் நாடு இந்தியா” என ககாரின் கூறியதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
விண்வெளித் துறையில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் இந்த சுதந்திர தின வாழ்த்து (Independence Day ) அமைந்துள்ளது.

