Solar Eclipse 2026: வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி அரிய முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த வானியல் நிகழ்வின்போது சில பகுதிகளில் பட்டப்பகலிலேயே சூரியன் முழுமையாக மறைந்து, சில நிமிடங்களுக்கு இரவு போன்ற இருள் சூழும்.
2026ஆம் ஆண்டின் முழு சூரிய கிரகணம் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தை நேரடியாகக் காண முடியும். வானியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் இந்த அரிய நிகழ்வைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஏன் இந்த கிரகணம் சிறப்பு?
இந்த சூரிய கிரகணம் (Solar Eclipse 2026) பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஐரோப்பாவில் 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்படும் முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும். அதேபோல், ஸ்பெயினின் பிரதான பகுதிகளில் 1905ஆம் ஆண்டுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஐஸ்லாந்தில் 1954ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முழு சூரிய கிரகணம் தென்பட உள்ளது.
இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வானியல் ஆர்வலர்கள் கிரகணப் பாதையில் அமைந்துள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். கிரகணத்தைத் தெளிவாகக் காணக்கூடிய இடங்களில் தங்குமிடங்கள் மற்றும் பயண ஏற்பாடுகளையும் பலர் முன்கூட்டியே திட்டமிட்டு வருகின்றனர்.
முழு சூரிய கிரகணம் எப்படி உருவாகிறது?
சூரியனை ஒப்பிடும்போது சந்திரன் மிகவும் சிறியதாக இருந்தாலும், அது பூமிக்கு மிகவும் அருகில் உள்ளது. இந்த அளவு மற்றும் தொலைவு விகிதத்தின் காரணமாக, பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியனும் சந்திரனும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பது போல் தோன்றுகின்றன.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கிறது. அப்போது சந்திரனின் நிழல் பூமியின் குறிப்பிட்ட குறுகிய பகுதியில் விழுவதால், அந்தப் பகுதியில் முழு சூரிய கிரகணத்தை காண முடியும்.
கிரகணத்தின் முழுமை நிலை ஏற்படும் பகுதிகளில், பட்டப்பகலில் திடீரென வெளிச்சம் குறைந்து இருள் சூழ்வதைப் பார்க்க முடியும். வெப்பநிலையில் சிறிய மாற்றம் ஏற்படுவதுடன், சுற்றுப்புற ஒளி மற்றும் நிழல்களிலும் வித்தியாசமான மாற்றங்கள் காணப்படலாம்.
சூரியனின் ‘கொரோனா’ தரும் அற்புதக் காட்சி
முழு சூரிய கிரகணத்தின் போது காணக்கூடிய முக்கியமான காட்சிகளில் ஒன்று சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கொரோனா.
சாதாரண நேரங்களில் சூரியனின் அதிகப்படியான பிரகாசம் காரணமாக கொரோனாவை நேரடியாகக் காண முடியாது. ஆனால் சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும் தருணங்களில், கருமையான சந்திரனைச் சுற்றி வெள்ளி நிற ஒளிவட்டம் போன்ற கொரோனா தென்படும். இதுவே முழு சூரிய கிரகணத்தின் மிக அழகான காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கிரகணம் சூரிய அஸ்தமனத்தை ஒட்டிய நேரத்தில் சில பகுதிகளில் நிகழ்வதால், அடிவானத்திற்கு அருகில் சூரியனின் காட்சியுடன் வானத்தின் நிறங்களும் இணைந்து கண்கவர் காட்சியை உருவாக்கக்கூடும். இதனால் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்கள் கிரகணத்தைப் பார்ப்பதற்கான சிறந்த இடங்களை முன்கூட்டியே தேர்வு செய்து வருகின்றனர்.
ஐஸ்லாந்தில் கிரகணத்தின் போது சூரியன் வானில் ஓரளவு உயரத்தில் இருக்கும் என்பதால், சூரியனின் கொரோனாவை அவதானிக்கவும் புகைப்படம் எடுக்கவும் நல்ல வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
ஐரோப்பாவில் எங்கெல்லாம் பார்க்கலாம்?
முழு சூரிய கிரகணம் ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் தென்படும். அதேவேளை, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பாவின் பல பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் காணப்படும்.
இந்தியாவில் பார்க்க முடியுமா?
இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை நேரடியாகக் காண முடியாது. கிரகண நிகழ்வு இந்தியாவில் இரவு நேரத்தில் நடைபெறுவதால், அந்த நேரத்தில் சூரியன் வானில் இல்லாத காரணத்தால் இந்தியாவில் இருந்து இந்த சூரிய கிரகணம் தென்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

