சென்னையில் குறைவாக மதிப்பிடப்பட்டதாக கண்டறியப்பட்ட சொத்துகளுக்கான வரி மறுமதிப்பீட்டு (Property Tax Reassessment) நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் அறிவித்துள்ளார். பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2,000 கோடி சொத்து வரி வசூல்
சென்னை மாநகராட்சியின் கீழ் 13 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து ஆண்டுதோறும் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சியின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக சொத்து வரி (Property Tax) உள்ளது.
நவீன தொழில்நுட்பம் மூலம் மறுமதிப்பீடு!
இதுவரை சொத்து உரிமையாளர்கள் அளிக்கும் சுயமதிப்பீட்டின் அடிப்படையில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சொத்துகளின் மதிப்பீட்டை துல்லியமாகக் கணக்கிடும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கியது.
இதில் சொத்து குறைவாக மதிப்பிடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அந்த சொத்துகளுக்கான வரியை மறுமதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு வந்தது.
10 மடங்குக்கு மேல் வரி உயர்வு – பொதுமக்கள் புகார்
இந்த மறுமதிப்பீட்டு நடவடிக்கையால் சில பகுதிகளில் சொத்து வரி 10 மடங்குக்கும் மேல் உயர்த்தப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். சென்னையில் 100 முதல் 300 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் குற்றம்சாட்டியிருந்தார்.சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவும் இந்த நடவடிக்கை தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருந்தார்.
சொத்துகளுக்கான மறுமதிப்பீடு நிறுத்தம்
இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து கடந்த சில நாட்களாக வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, குறைவாக மதிப்பிடப்பட்டதாக கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான வரி மறுமதிப்பீட்டை உடனடியாக நிறுத்துவதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் அறிவித்துள்ளார். பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பழைய வரியே மீண்டும் நடைமுறைக்கு வரும்
மறுமதிப்பீட்டின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட வரித்தொகை, அதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அளவுக்கே மீண்டும் மாற்றப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏற்கெனவே உயர்த்தப்பட்ட வரித்தொகையை செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு, அந்த கூடுதல் தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பண வரியாக கணக்கில் ஈடு செய்யப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், சொத்து வரி மறுமதிப்பீடு தொடர்பாக பொதுமக்களிடையே எழுந்திருந்த அதிருப்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

