சென்னையில் சொத்து வரி (Property tax ) பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பகிர்ந்து வந்த நிலையில், இத்தகவலுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கமளித்துள்ளார்.
மாநகராட்சிப் பகுதியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாகப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் வதந்தியே என்று தெரிவித்த ஆணையர், இதுகுறித்து விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாநகராட்சி அளித்துள்ள விளக்கங்கள்:
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாகச் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை.இதுவரை குறைந்த மதிப்பீடு (Under-assessment) அல்லது தவறான அளவீடுகளின் அடிப்படையில் வரி செலுத்தி வந்த சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே திருத்தப்பட்ட வரி கேட்பு நோட்டீஸ்கள் (Revised Assessment Notices) அனுப்பப்பட்டுள்ளன.
சொத்துகளின் பரப்பளவில் உள்ள முரண்பாடுகள், ஜி.ஐ.எஸ் (GIS – Geographic Information System) செயற்கைக்கோள் தரவுகள், அரசின் பிற அதிகாரப்பூர்வத் தகவல்கள் மற்றும் உரிமையாளர்களின் ‘சுய விவரப் பிரகடனம்’ (Self-Declaration) ஆகியவற்றை ஒப்பீடு செய்து கண்டறியப்பட்டுள்ளன.
மேல்முறையீடு செய்வது எப்படி?
வழங்கப்பட்டுள்ள இந்தத் திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டின் மீது சொத்து உரிமையாளர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அதற்கான தீர்வையும் மாநகராட்சி அறிவித்துள்ளது:
திருத்தப்பட்ட நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் முறையீடு செய்ய வேண்டும்.சம்பந்தப்பட்ட மண்டலத்தின் துணை ஆணையரிடம் (Regional Deputy Commissioner) இதற்கான மேல்முறையீட்டு மனுவை அளிக்கலாம். தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டுத் தகுந்த தீர்வு காணப்படும்.
சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் தவறான வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” எனப் பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
ட்ரோன் மூலம் கணக்கெடுப்பு
சென்னை மாநகராட்சி தனது வருவாயைப் பெருக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் நகரம் முழுவதும் ட்ரோன் (Drone) மற்றும் ஜி.ஐ.எஸ் மேப்பிங் மூலம் அனைத்துக் கட்டடங்களையும் டிஜிட்டல் முறையில் துல்லியமாகக் கணக்கெடுத்து வருகிறது.
பல இடங்களில் கட்டட உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாகக் கட்டடம் கட்டியிருப்பது அல்லது குடியிருப்புப் பயன்பாட்டிற்கு அனுமதி பெற்று வணிக நோக்கிலபயன்படுத்தி வருவது போன்றவை இத்தொழில்நுட்பத்தின் மூலம் தெரியவந்துள்ளன.
பொதுமக்கள் சொத்து வரி குறித்த சந்தேகங்கள், கட்டட அளவீடுகள் மற்றும் மேல்முறையீட்டு விவரங்களை சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (chennaicorporation.gov.in) வழியாகவும் அறிந்து கொள்ள முடியும்.

