சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை பீச்–தாம்பரம்–செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ரயில்வே பணிகள் காரணமாக சில சேவைகள் ரத்து செய்யப்படுவதுடன், சில ரயில்களின் இயக்க நேரம் மற்றும் வழித்தடத்திலும் மாற்றம் ஏற்படுகிறது.
பயணிகளுக்கு ஏற்படும் மாற்றம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, இரவு நேரங்களில் ரயில் சேவைகளில் (Suburban Train) மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6 வரை சில சேவைகள் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ரயில்கள் ரத்து
சென்னை பீச்சில் இருந்து தாம்பரம் நோக்கி இரவு நேரங்களில் புறப்படும் குறிப்பிட்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதேபோல், செங்கல்பட்டு மற்றும் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை பீச் நோக்கி வரும் சில சேவைகளும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், சென்னை பீச்–செங்கல்பட்டு இடையே அதிகாலை இயக்கப்படும் ரயில் சேவையிலும் குறிப்பிட்ட நாட்களில் பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
நேரங்களிலும் மாற்றம்
சில ரயில்களின் புறப்படும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, சென்னை பீச்–கூடுவாஞ்சேரி ரயில் வழக்கமான நேரத்தைவிட சில நிமிடங்கள் தாமதமாக புறப்படும். சென்னை பீச்–செங்கல்பட்டு சேவைகளில் சில ரயில்கள் வழக்கத்தைவிட முன்னதாக இயக்கப்பட உள்ளன.
பயணிகள் கவனத்திற்கு
ரயில் சேவைகளில் மாற்றம் அமல்படுத்தப்படும் நாட்களில், பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுவதற்கு முன்பு திருத்தப்பட்ட ரயில் நேரங்களை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரயில்வே பணிகள் நிறைவடைந்த பின்னர் வழக்கமான சேவைகள் மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

