தமிழ்நாட்டில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் வெற்றிப் பயணம்’ திட்டம் (Vettri Payanam Thittam) அக்டோபர் 2-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும்* என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பேசிய முதல்வர், பெண்களின் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
எந்தப் பேருந்துகளில் இலவச பயணம்?
முதற்கட்டமாக மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண அரசுப் பேருந்துகளுடன், விரைவு, எல்எஸ்எஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும்* பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். மேலும், மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்காக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் இந்தச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரம்பு கிடையாது
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்களுக்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடோ விதிக்கப்படாது* என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதர பேருந்து சேவைகளுக்கும் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள், பணிபுரியும் பெண்களுக்கு பயன்
இந்தத் திட்டத்தின் மூலம் மாணவிகள் தொலைதூர கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவும், பணிபுரியும் பெண்கள் வேலைக்குச் செல்லவும், மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்லவும் கட்டணமின்றி பேருந்துகளைப் பயன்படுத்த முடியும் என முதல்வர் தெரிவித்தார். மேலும், திருநங்கைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.6,000 கோடி செலவு
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை (Vettri Payanam Thittam) செயல்படுத்துவதற்கு அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் *ரூ.6,000 கோடி செலவு* ஏற்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு பொதுப் போக்குவரத்தை எளிதாக அணுகும் வாய்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

