அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய, அதிகாரத்தைக் கொண்டு பாஜக மிரட்டுவதாகக் கூறுவது தவறு; அவர்கள் யாரையும் மிரட்டவில்லை; நல்லெண்ணம் மற்றும் நட்பு அடிப்படையில் மத்தியஸ்தராக மட்டுமே செயல்படுகிறார்கள் என்றார்.
அதிமுகவை இன்னும் நூற்றாண்டு காலம் எடுத்துச் செல்ல வேண்டுமானால், ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்; அதனால் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் அல்லது தூங்குவது போல நடிப்பவர்கள் (எடப்பாடி பழனிசாமி தரப்பு) ஒருங்கிணைய முன்வருவார்கள் என்று நம்புவதாக டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கூட்டணிகளுக்குத் தலைமை வகிக்கும் கட்சிகளெல்லாம் தங்களுடன் பேசி வருவதாக தினகரன் கூறினார். அத்துடன் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் இருக்கிறது என்றார்.
தமிழ்நாட்டில் நான்கு முனை – ஐந்து முனை போட்டிகள் இருக்கும் என்று ஆளாளுக்கு கருத்து கூறி வருகின்றனர். ஆனால், நான்கு முனை போட்டிதான் அமையும் என்பது தினகரனின் கருத்து.
தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சி; ஆளும் திமுக தலைமையிலான அணி; அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி; விஜய் தலைமையிலான தவெக தலைமையிலான ஒரு அணி என்று நான்கு முனை போட்டி தான் அமையும் என்றார் தினகரன்.

