தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் ( TASMAC ) கடைகளில் 10 பிராந்தி வகைகள் மற்றும் 1 ரம் வகை என மொத்தம் 11 மதுபானங்களின் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய ஆய்வில், இயற்கைக்கு நிகரான மற்றும் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் (Artificial flavouring substances) சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து என்ரிகா எண்டர்பிரைசஸ் (Enrica Enterprises Pvt Ltd) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 11 வகையான மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ( TASMAC ) உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் ( TASMAC ) மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள், கிடங்கு (Depot) மேலாளர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள், பார்கள் (FL2, FL3 உரிமம் பெற்றவர்கள்) மூலம் இந்த 11 பிராண்டுகளின் மதுபானங்களை மாற்றுவதையோ அல்லது விற்பனை செய்வதையோ மறு உத்தரவு வரும் வரை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள 11 மது வகைகள்
- வி.எஸ்.ஓ.பி எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி (VSOP Exshaw Gold Brandy)
- லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளண்டட் பிரீமியம் பிராந்தி (Louis Vernant XO Blended Premium Brandy)
- மெக்டொவல்ஸ் வி.எஸ்.ஓ.பி பிராந்தி (McDowells VSOP Brandy)
- நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி (No1 McDowells Fine Brandy)
- மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி (Mensclub Deluxe Brandy)
- ஹனி பீ ஃபைன் பிராந்தி (Honey Bee Fine Brandy)
- என்ரிகா வி.எஸ்.ஓ.பி செலக்ட் பிராந்தி (Enrica VSOP Select Brandy)
- என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி (Enrica Platinum Reserve XO Brandy)
- என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி (Enrica Premium French Brandy)
- வீரன் ஸ்பெஷல் பிராந்தி (Veeran Special Brandy)
- என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் (Enrica Old Indie Classic Dark Rum)
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வளாகத்தில், FSSAI-ன் தென் மண்டல அலுவலக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வைத் தொடர்ந்து, இந்தத் தயாரிப்புகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நுகர்வோருக்கு இவற்றை விற்பனை செய்யக் கூடாது என்றும் FSSAI உத்தரவிட்டது.
இதையடுத்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் FSSAI-ன் வழிகாட்டுதல்களை டாஸ்மாக்கிற்கு அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் இந்தத் தடைச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனம் டாஸ்மாக்கிற்கு 20-க்கும் மேற்பட்ட மது வகைகளை விநியோகம் செய்து வருகிறது. இதில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள பல பிராண்டுகள், டாஸ்மாக்கில் ( TASMAC )அதிக அளவில் விற்பனையாகும் சாதாரண (ordinary) வகை மதுபானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

