சென்னையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகள், விளையாட்டுத் திடல்கள் மற்றும் பூங்காக்களில் இலவச வைஃபை ( Wi-Fi ) வசதி வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
44 இடங்களில் இலவச Wi-Fi வசதி
முதல்வரின் உத்தரவின்படி, உயர்தர இணைய சேவையை பொதுமக்கள் தடையின்றி பயன்படுத்தும் வகையில், முதல்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் 5 இடங்களிலும், தலைமைச் செயலக பூங்காவில் 12 இடங்களிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையைப் பயன்படுத்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வைஃபையை ஆன் செய்து, சம்பந்தப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர், செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்து இலவச வைஃபை சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்களின் இணைய பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் இந்த இலவச வைஃபை சேவை வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

