தமிழ்நாட்டில் அரசு நிகழ்சிகள், கல்வி நிறுவனங்கள், பொதுநிகழ்சிகள் ஆகியவற்றின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படுவது நீண்ட காலமாக பின்பற்றப்படும் மரபாகும்.
தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசினர் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து முதல்வர் விஜய் பேசியதாவது,
தமிழ்த்தாய் வாழ்த்து.
மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களால் 1891-ல் எழுதப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து, (Tamil Thai Vazhthu) 1970-ம் ஆண்டு நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது 2021 டிசம்பரில் மாநில பாடலாகவும் அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்,மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதிய கடிதத்தில், மாநில பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970-ம் ஆண்டில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், அரசாணை வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.
தமிழ்த்தாய் முதலில் பாடப்படுவது கட்டாயம்…
ஆகவே, தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thai Vazhthu) தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது என்றார்.
தனித்தீர்மானம் நிறைவேற்றம்…
இதை தொடர்ந்து முதல்வர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

