தனியார் மருத்துவமனைகளில் (Private Hospital) நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களை கட்டுப்படுத்தும் வகையில், நாடாளுமன்ற நிலைக் குழு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
அறை வாடகைக்கு கட்டுப்பாடுகள்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 176-வது அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை 3 நட்சத்திர ஓட்டல்களின் கட்டணத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அறை வாடகையுடன் பயிற்சி மருத்துவர், செவிலியர், உணவு மற்றும் துப்புரவு உள்ளிட்ட செலவுகளை மட்டுமே கூடுதலாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாக நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சைச் செலவு மதிப்பீட்டை மருத்துவமனைகள் கட்டாயம் வழங்க வேண்டும். நோயாளி தேர்வு செய்யும் அறையின் அடிப்படையில் சிகிச்சைக் கட்டணத்தை உயர்த்தும் நடைமுறையை கைவிட்டு, அனைத்து அறைகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சைக் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ‘அம்ரித்’ மற்றும் ‘ஜன் அவுஷதி’ மலிவு விலை மருந்தகங்களை கட்டாயமாக அமைக்க வேண்டும். புற்றுநோய் மற்றும் அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கு உதவும் வகையில், CSR நிதி மற்றும் நன்கொடைகளை ஒருங்கிணைத்து தனி தேசிய மற்றும் மாநில சுகாதார நிதியை உருவாக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் ஒரு குடும்பம் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது சராசரியாக ரூ.34,064 வரை செலவிடுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1,000 பேருக்கு 3.5 படுக்கைகள் இருக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கு மாறாக, இந்தியாவில் 1,000 பேருக்கு 1.3 படுக்கைகள் மட்டுமே உள்ளதால், குறிப்பாக கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

