காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் எண்ணம் இல்லை என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் காவிரி விவகாரத்தில் ஒன்றிணைந்து நிற்கின்றன. ஆனால், இங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட அரசு மறுக்கிறது” என்றார்.
முதல்வர் விஜய் பேச்சு
இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சியினரின் கருத்துகளை அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகக் கூறினார். காவிரி நமக்கு உயிராதாரம், அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார்.
“காவிரி விவகாரத்தைத் தீர்ப்பதற்கான ஒரே எண்ணத்துக்காகவே பெங்களூரு செல்ல முடிவெடுத்தேன். பகை நாடுகளே பேசித் தீர்க்கின்றன, பக்கத்து மாநிலத்துடன் பேசிப் பார்க்கலாம் என்றுதான் நினைத்தேன். பெங்களூரு சென்று அவமானம் நடந்தால் என்னாகும் எனக் கேட்டார்கள்; மக்களுக்காக அதையும் தாங்கத் தயார்” என்றும் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

