Tim cook: ஆப்பிள் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து டிம் குக் விலகல்; புதிய தலைமை அதிகாரியாக ஜான் டெர்னஸ்
வாஷிங்டன்: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) பதவியில் இருந்து டிம் குக் விலகுகிறார். சுமார் 15 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்திய அவர், இனி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக (Executive Chairman) செயல்பட உள்ளார்.
15 ஆண்டுகள் ஆப்பிளை வழிநடத்திய டிம் குக்
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலக் காரணங்களால் CEO பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டு டிம் குக் அந்தப் பொறுப்பை ஏற்றார்.
அதன்பிறகு, ஆப்பிள் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி மற்றும் உலகளாவிய விரிவாக்கத்தில் டிம் குக் முக்கிய பங்காற்றினார். அவரது தலைமைக் காலத்தில் ஆப்பிளின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்து, நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது.
ஆப்பிளின் முக்கிய தயாரிப்புகள்
டிம் குக் தலைமையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மட்டுமின்றி பல்வேறு புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்தியது.
ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் உள்ளிட்ட தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஆப்பிள் மியூசிக், ஐகிளவுட் போன்ற சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டன. நிறுவனத்தின் சொந்த சிப் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அவரது காலத்தில் முக்கியத்துவம் பெற்றன.
அடுத்த CEO யார்?
டிம் குக்கிற்கு பதிலாக ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் (John Ternus) பொறுப்பேற்க உள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் Hardware Engineering பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்த ஜான் டெர்னஸ், செப்டம்பர் 1, 2026 முதல் CEO பதவியை ஏற்க உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய அத்தியாயத்தை தொடங்கும் ஆப்பிள்
டிம் குக் CEO பதவியில் இருந்து விலகினாலும், ஆப்பிள் நிறுவனத்துடனான அவரது தொடர்பு தொடரும். அவர் Executive Chairman ஆக செயல்பட்டு, நிறுவனத்தின் முக்கியமான உத்திகள் மற்றும் நிர்வாக விவகாரங்களில் தொடர்ந்து பங்களிக்க உள்ளார்.
ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு (AI), புதிய தலைமுறை ஐபோன்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களில் எவ்வாறு முன்னேறப் போகிறது என்பது தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

