எவரெஸ்ட் (Everest) மற்றும் எல்ஜி (L.G) நிறுவனங்கள் தயாரிக்கும் பெருங்காயத் தூளின் தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் பெருங்காயத் தூள் விற்பனைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI Ban தடை விதித்துள்ளது.
எவரெஸ்ட் தயாரிப்பில் குறைபாடு
எவரெஸ்ட் நிறுவனத்தின் பல்வேறு வகையான பெருங்காயத் தூள் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், சில தயாரிப்புகளில் உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி இருக்க வேண்டிய அளவுகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
பெருங்காயத் தூளில் ஆல்கஹாலில் கரையும் சாறு குறைந்தபட்சம் 5 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால், சில மாதிரிகளில் இந்த அளவு 3 சதவீதமாக மட்டுமே இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஜி பெருங்காயத்திலும் பிரச்சினை
எல்ஜி நிறுவனத்தின் பெருங்காயத் தூள் மாதிரிகளிலும் தரக்குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட அளவை விட மாவுச்சத்து அதிகமாக இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
விற்பனையை நிறுத்த உத்தரவு
இதையடுத்து, எவரெஸ்ட் மற்றும் எல்ஜி நிறுவனங்களின் பல்வேறு வகையான பெருங்காயத் தூள் தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்த FSSAI உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ள தரநிலைகளை பூர்த்தி செய்யாத பொருட்களை திரும்பப் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விளக்கம் அளிக்க அறிவுறுத்தல்
கண்டறியப்பட்ட குறைபாடுகளை சரிசெய்து, விதிமீறல்கள் தொடர்பான விளக்கத்தையும் திருத்தப்பட்ட தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் பூர்த்தி செய்யப்படும் வரை விற்பனைத் தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

