நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் – போராடி மீட்ட ராணுவ வீரர்கள்!

நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்; போராடி மீட்ட ராணுவ வீரர்கள்!

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பெருவெள்ளத்தில் சிக்கி நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை, மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவ வீரர்கள் கடுமையாக போராடி உயிருடன் மீட்டனர்.

நேபாளத்தின் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி காலையில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. போடேகோஷியின் கிளை நதியான லெண்டே ஆற்றின் நீரோட்டத்தை பனிச்சரிவு தடுத்ததால் உருவான ஏரி உடைந்ததையடுத்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாறைகள், மண் மற்றும் சேறு உள்ளிட்டவை பெருக்கெடுத்து பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, ஒரு கிராமத்துக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கிருந்த வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது பெண் ஒருவர் வெள்ளத்தின் வேகமான நீரோட்டத்தில் சிக்கி, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடியபடி அடித்துச் செல்லப்பட்டார்.

இதனைப் பார்த்த நேபாள மீட்புக்குழுவினரும் ராணுவ வீரர்களும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சீறிப்பாய்ந்த வெள்ளநீரை துணிச்சலுடன் எதிர்கொண்டு, கடுமையான போராட்டத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட பெண் அருகில் இருந்த பெரிய பாறையின் மீது அமர வைக்கப்பட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் தனது வீடு சின்னாபின்னமானதையும், குடும்பத்தினர் வெள்ளத்தில் காணாமல் போனதையும் நினைத்து அவர் கடும் அதிர்ச்சியில் இருந்தார்.

அவரால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்த நிலையில், ராணுவ வீரர்கள் அவரது அருகில் அமர்ந்து ஆறுதல் கூறினர். தாங்கள் அவருக்கு துணையாக இருப்பதாக கூறி தைரியப்படுத்தினர்.

ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் இருந்து பெண்ணை மீட்டு, பின்னர் அவருக்கு ஆறுதல் கூறிய காட்சிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

உங்கள் கருத்து?

Related Posts