நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 400 பேர்? அமைச்சர் ராஜ்மோகன் அதிர்ச்சி தகவல்!

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் எண்ணிக்கை 103 அல்ல; 400 பேர் வரை சென்றிருப்பது கண்டுபிடிப்பு – 140 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 400 பேர் வரை இருக்கலாம் என பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

நேபாள பெருவெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் சிக்கியுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியானது. அவர்களில் பலரது நிலை குறித்து உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், கும்பகோணம் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் நேபாளம் சென்ற 21 பேர் தற்போது பாதுகாப்பாக சென்னை திரும்பியுள்ளனர்.

400 பேர் வரை நேபாளம் சென்றதாக தகவல்

இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், சென்னை மற்றும் கும்பகோணத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சிகளில் முன்பதிவு செய்து 103 பேர் நேபாளம் சென்றதாக முதலில் தெரியவந்தது.

இதில் கும்பகோணம் ஏஜென்சி மூலம் நேபாளம் சென்ற 21 பேர் மட்டுமே தற்போது பாதுகாப்பாக சென்னை திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் இருந்து ரயில் மூலம் நேபாளம் சென்ற மேலும் 140 பேர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறு குழுக்களாக சென்றவர்களை தேடும் பணி

டிராவல்ஸ் ஏஜென்சிகள் மூலம் சென்றவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்து சிறு, சிறு குழுக்களாகவும் பலர் நேபாளம் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களின் விவரங்களை சேகரித்து, ஒவ்வொருவரையும் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

90 பேரின் நிலை என்ன?

தற்போதைய தகவலின்படி, தமிழகத்தில் இருந்து 400 பேர் வரை நேபாளம் சென்றிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 140 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், 21 பேர் சென்னை திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 90 பேரின் தற்போதைய நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனதாகக் கூறப்படும் தமிழர்களை கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உங்கள் கருத்து?

Related Posts