கோவையில் பயங்கர தீ விபத்து: அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடிப்பு; 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

கோவையில் பயங்கர தீ விபத்து: அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடிப்பு; 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

கோவை நவஇந்தியா பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் அடுத்தடுத்து சுமார் 20 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட தகர வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

கோவை நவஇந்தியா பகுதியில் திடீர் தீ விபத்து

கோவை மாவட்டம் நவஇந்தியா பகுதி அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர ஷெட்களில் திடீரென தீப்பற்றியது. கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
தீ மளமளவென பரவிய நிலையில், குடியிருப்புகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடிக்கத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

20 சிலிண்டர்கள் வெடித்து பயங்கர சத்தம்

தீ விபத்தில் சுமார் 20 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிலிண்டர்கள் வெடித்ததால் அருகிலிருந்த தகர வீடுகளும் கடுமையாக சேதமடைந்தன. 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

32 சிலிண்டர்கள் பத்திரமாக மீட்பு
தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் மூலம், மேலும் வெடிக்கும் நிலையில் இருந்த சுமார் 32 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மிகப்பெரிய அளவில் ஏற்பட இருந்த மற்றொரு விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் பணிக்கு சென்றதால் உயிர் சேதம் தவிர்ப்பு
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்டபோது தகர ஷெட்களில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் பணிக்கு சென்றிருந்ததாக தெரிகிறது.

சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சம்பவ நேரத்தில் யாரும் குடியிருப்புகளில் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக சுற்றுவட்டார மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வில் அருகிலிருந்த தகர வீடுகள் சேதமடைந்துள்ளன. விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்து?

Related Posts