தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், தவெக அமைச்சர் சம்பத் குமார் எம்.ஜி.ஆர் பாடலை பாடியது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் Udhayanidhi உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாக பதிலளித்தார்.
எம்.ஜி.ஆர் பாடலை பாடிய அமைச்சர்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பான விவாதத்தின்போது அமைச்சர் சம்பத் குமார் பதிலுரை வழங்கினார். அப்போது, பேரவைத் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பது தெரியும் என்றும், அவருக்காக ஒரு சிறிய பாடலை பாடுவதாகவும் கூறினார்.
மேலும், அந்தப் பாடல் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் பிடிக்கும் என்று குறிப்பிட்டு, எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தின் பாடல் வரிகளை பாடினார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அமைச்சர் பாடலை தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து அவை முன்னவர் செங்கோட்டையன் குறுக்கிட்டு, அமைச்சர் எம்.ஜி.ஆர் பாடலை மட்டுமே பாடியதாகவும், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே அமைச்சர் சம்பத் குமார், எம்.ஜி.ஆர் பாடலில் குறை இருப்பதாக கூறுகிறீர்களா என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் மேலும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சபாநாயகர் அவரை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.
“என்னை வேற சாட்சிக்கு கூப்பிட்டு இருக்காரு”
இதனைத் தொடர்ந்து பேசிய Udhayanidhi உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பதில் சொல்லத் தொடங்கிவிட்டதாகவும், நேற்று சொல்ல வேண்டிய பதிலை இன்று தொடங்கியிருப்பதாகவும் கிண்டலாக குறிப்பிட்டார்.
மேலும், “பாட்டு பாட ஆரம்பிச்சுட்டார். இதுல சாட்சிக்கு என்னை வேற கூப்பிட்டு இருக்காரு” என நகைச்சுவையாக தெரிவித்தார். உதயநிதியின் இந்த கருத்தால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
விலைவாசி உயர்வையும் எழுப்பிய உதயநிதி
இதற்கு முன்னதாக சட்டப்பேரவை தொடங்கியதும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து Udhayanidhi உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

