“அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியுமா?” – மரிய வில்சன் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி
புதுச்சேரி வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கோரிய தமிழக நிதி அமைச்சருக்கு நீதிபதி கண்டனம்
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், புதுச்சேரியில் தனது சகோதரர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியதற்கு உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த மரிய வில்சனின் சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலினை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என்று கூறுவதற்கு நிதியமைச்சர் இங்கிலாந்தின் அரசர் அல்ல” எனக் குறிப்பிட்டார்.
மேலும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, “மனுதாரர் மாநிலத்தின் நிதி அமைச்சர்தான். அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான அவர், பதவிக்கு வந்த பிறகு ஆஜராக மாட்டாரா?” என கேள்வி எழுப்பினார்.
இதனிடையே புதுச்சேரி காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லவிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி, “வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பும்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகலாமே?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது என்றும், அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் என்ற தகவல் மக்களிடம் செல்லக்கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் மரிய வில்சன் எந்த தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்பதை தெரிவிக்குமாறு அவரது தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மதியத்திற்கு ஒத்திவைத்தார்.

