தூத்துக்குடி பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை: தோட்டத்தில் நடந்த பயங்கரம்!
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ என்ற செல்வ முருகன் (41), நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தோட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘துப்பாக்கி செல்வம்’ மீது 27 வழக்குகள்
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த செல்வ முருகன் என்ற செல்வம் மீது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 6 கொலை வழக்குகள் உள்பட 27 வழக்குகள் நிலுவையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தூத்துக்குடி போலீசாரின் ‘ஏ பிளஸ்’ ரவுடிகள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றிருந்தார். நாகர்கோவிலில் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தியதாக கூறப்படுவதால் அவருக்கு ‘துப்பாக்கி செல்வம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் எச்சரித்ததால் வேறு பகுதியில் வசிப்பு
செல்வத்திற்கு தூத்துக்குடியில் எதிரிகளால் அச்சுறுத்தல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் உள்ளூரில் தங்க வேண்டாம் என போலீசார் எச்சரித்திருந்தனர்.
இதையடுத்து தனது மனைவியுடன் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே கரும்பாட்டூர் பகுதியில் செல்வம் வசித்து வந்துள்ளார்.
சுமார் 2 மாதங்களுக்கு முன்பு தனது தாயார் வசித்து வந்த நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஈத்தங்காடு பகுதிக்கு அவர் சென்றதாக தெரிகிறது.
தோட்டத்தில் மர்மமான முறையில் கொலை
சம்பவத்துக்கு முந்தைய மாலை, சங்கநேரியில் உள்ள தனது தாயாருக்கு சொந்தமான தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு செல்வம் சென்றுள்ளார்.
அங்கு அவர் தனது நண்பர் ஒருவருடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் மது அருந்திவிட்டு தோட்டத்தில் தூங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், மறுநாள் காலை அருகில் உள்ள தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிசிடிவியில் சிக்கிய 2 பேர்
தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், இருவர் மட்டுமே தோட்டத்திற்குச் சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து செல்வத்துடன் இருந்த நண்பரிடம் போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
நண்பருடன் தகராறா? போலீசார் தீவிர விசாரணை
செல்வம் மற்றும் அவரது நண்பருக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதா அல்லது வேறு நபர்கள் தோட்டத்திற்குள் புகுந்து அவரை கொலை செய்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

