வேளாங்கண்ணி திருவிழாவில் பரபரப்பு: பட்டாசு தீப்பொறி பட்டு ஹீலியம் பலூன்கள் வெடிப்பு; 2 பேர் படுகாயம்!

வேளாங்கண்ணி திருவிழாவில் பரபரப்பு: பட்டாசு தீப்பொறி பட்டு ஹீலியம் பலூன்கள் வெடிப்பு; 2 பேர் படுகாயம்

நாகை: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியின்போது பட்டாசு தீப்பொறி பட்டு அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஹீலியம் பலூன்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பேராலயத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ம் தேதி அன்னையின் பிறப்பு விழாவுடன் நிறைவடைகிறது. விழாவையொட்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது பட்டாசு வெடிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து வெளியான தீப்பொறி அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஹீலியம் பலூன்கள் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹீலியம் பலூன்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த பகுதியில் ஹீலியம் பலூன்கள் வெடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த கலைச்செல்வன், ரமேஷ் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து?

Related Posts