DMKவில் 110 மாவட்ட பொறுப்பாளர்கள்: முப்பெரும் விழாவில் அறிமுகம் செய்ய ஸ்டாலின் திட்டம்!
சென்னை: திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், அவர்களை வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் அறிமுகம் செய்ய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
77-ல் இருந்து 110 மாவட்டங்களாக DMK நிர்வாகம்
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கட்சியின் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இதுவரை 77 ஆக இருந்த திமுகவின் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களின் பட்டியலும், அவற்றின் கீழ் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
15 நாட்களுக்குள் பரிந்துரை
புதிய மாவட்டங்களுக்கான நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் அடுத்தகட்டமாக தொடங்கியுள்ளன.
தற்போதுள்ள 77 மாவட்ட செயலாளர்களும் தங்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டத்தை நடத்தி, புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தெந்த ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகள் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகளை தயாரிக்க வேண்டும்.
இந்த பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்
திமுகவில் வழக்கமாக மாவட்ட செயலாளர்கள் கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்கு முன்பாக, குறிப்பிட்ட மாவட்டத்தின் கட்சி நிர்வாகத்தை கவனிக்க மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
மாவட்டசெயலாளர்கள் தேர்தல் நடைபெறும் வரை, இந்த பொறுப்பாளர்களே கட்சி நிர்வாகப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள்.
DMK முப்பெரும் விழாவில் அறிமுகம்
110 மாவட்டங்களுக்கும் நியமிக்கப்படும் பொறுப்பாளர்களை ஒரே நிகழ்ச்சியில் அறிமுகம் செய்ய மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். முப்பெரும் விழா நடைபெறும் இடம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவின் இந்த மாவட்ட மறுசீரமைப்பு, கட்சியின் கள கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

