மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆன்லைன் செயலி மூலம் நடைபெற்றதாக கூறப்படும் முதலீட்டு மோசடி (Online Fraud ) விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை முதலீடு செய்தும் திரும்பப் பெற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள், தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, ஒரு நிதி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் பொதுமக்களை அணுகியதாக கூறப்படுகிறது. செல்போன் செயலி வாயிலாக பணம் செலுத்தினால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என ஆசை காட்டப்பட்டதாக தெரிகிறது.
இதனை நம்பிய பலர், தங்களது சேமிப்புப் பணத்துடன் மட்டுமின்றி கடன் பெற்றும் பணத்தை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட செயலி செயல்படாமல் போனதால், முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பணத்தை இழந்தவர்கள் ஒன்று திரண்டு தங்களது தொகையை மீட்டுத் தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலூர் பகுதியில் மதுரை-சென்னை நான்கு வழிச்சாலையிலும் மறியல் நடைபெற்றது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
ஒரே நாளில் ஆயிரக்கணக்கான புகார்கள்
பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வசதியாக போலீசார் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்தனர். மேலூர், செட்டியார்பட்டி மற்றும் வெள்ளலூர் நாடு கோட்டநத்தம்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் பெருமளவில் மக்கள் திரண்டனர்.
ஒரே நாளில் இந்த முகாம்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது புகார்களை பதிவு செய்தனர்.
3-வது நாளாகவும் தொடரும் புகார்
இந்த நிலையில், மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 3-வது நாளாகவும் போலீசாரிடம் புகார் அளிக்க வருகின்றனர். இன்றும் சுமார் 1,200 பேர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பலர் தாங்கள் தலா ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்ததாகவும், தற்போது அந்தப் பணத்தை மீட்க முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் புகார்கள் குவிந்து வருவதால், அவற்றை பதிவு செய்து விசாரணை நடத்தும் பணியில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
புகார்களின் அடிப்படையில் பணப்பரிமாற்றங்கள், செயலியை இயக்கியவர்கள் மற்றும் மோசடியில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

