Indian Railway: குப்பை வீசினால் இனி ரூ.1,000 அபராதம் – புதிய விதிகள் என்னென்ன?
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில் நிலையங்கள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் தூய்மை விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை இந்திய ரயில்வே உயர்த்தியுள்ளது. இதன்படி, குப்பை வீசுதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு இனி ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு
ரயில்வே வளாகங்களில் தூய்மையைப் பாதிக்கும் செயல்களுக்காக கடந்த 2012-ம் ஆண்டு முதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அதிகபட்சமாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், புதிய திருத்த விதிகளின்படி இந்தத் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் 2026 ஆகஸ்ட் 24-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டதன் மூலம் அமலுக்கு வந்துள்ளன.
எந்தெந்த செயல்களுக்கு அபராதம்?
ரயில் நிலையம் அல்லது ரயில் பெட்டிகளில் குப்பையை கண்ட இடத்தில் வீசுவது, கழிவுகளை விட்டுச் செல்வது போன்ற செயல்கள் புதிய விதிகளின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகும்.
மேலும், ரயில்வே வளாகங்களில் எச்சில் துப்புதல், தூய்மையைப் பாதிக்கும் வகையில் செயல்படுதல் மற்றும் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துதல் போன்ற செயல்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
அபராதம் செலுத்தவில்லை என்றால் என்ன?
ரயில்வே அதிகாரிகள் விதிக்கும் ரூ.1,000 அபராதத்தை செலுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட நபர் உரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம்.
அங்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
பயணிகள் கவனிக்க வேண்டியது
ரயில் நிலையங்களிலும் ரயில் பெட்டிகளிலும் குப்பையை கண்ட இடங்களில் வீசாமல், அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். தூய்மை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் அபராதத்தை தவிர்ப்பதுடன், ரயில்வே வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கவும் பயணிகள் ஒத்துழைக்க வேண்டும்.
இந்திய ரயில்வே ஏற்கனவே நீண்ட தூர ரயில்களில் On Board Housekeeping சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தூய்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

