உத்தரப் பிரதேசத்தில் வயதான பெற்றோருக்கு ஆதரவளிக்காமல், அவர்களை முறையாக கவனிக்காத அல்லது மரியாதையின்றி நடத்தும் பிள்ளைகளை தங்களது சொந்த சொத்திலிருந்து வெளியேற்றும் வகையில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளன.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அமைச்சரவை, ‘Maintenance and Welfare of Parents and Senior Citizens Rules-2014’ விதிகளில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஆகஸ்ட் 25-தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
பிள்ளைகளின் புறக்கணிப்புக்கும் எதிராக நடவடிக்கை
புதிய விதிகளின்படி, வயதான பெற்றோர்கள் தங்களுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் மரியாதை கிடைக்கவில்லை எனக் கருதினால், தங்களது சொத்தில் வசிக்கும் பிள்ளைகள் அல்லது சார்ந்த உறவினர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை கோர முடியும்.
மூத்த குடிமக்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதே இந்த விதிமாற்றத்தின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.
புகார் அளிக்க வாய்ப்பு
பெற்றோர்களை கவனிக்காமல் இருப்பது, முறையாக பராமரிக்காதது அல்லது தவறாக நடத்துவது போன்ற புகார்கள் தொடர்பாக உரிய நடைமுறையின் மூலம் நடவடிக்கை எடுக்க இந்த திருத்தம் வழிவகுக்கும்.
மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மரியாதையான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

