தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த், திமுக சார்பில் சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் குமாரி ஆகியோர் களமிறங்குகின்றனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் தவெக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட நேயம் மக்கள் கழகம், இந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டிருந்தது. இதற்காக தவெக ஆதரவையும் அந்தக் கட்சி கோரியிருந்தது.
இந்த நிலையில், காங்கிரஸுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் நேயம் மக்கள் கழகத்தின் வேட்பாளர் விநாயகம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதையடுத்து அவர் காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளார். இருப்பினும், காங்கிரஸ் தலைமையின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், தமிழகத்தில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தவெகவிடம் கேட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.
இதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தவெக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் தலைமையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தை சந்தித்தனர். அப்போது தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கோரி முறைப்படி கடிதம் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து புதுச்சேரி தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பின்னர் பேசிய அமைச்சர் ஆனந்த், தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு தவெக ஆதரவு அளிக்கும் என்றும், கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்றும்* அறிவித்தார்.
காங்கிரஸ் வேட்பாளராக விநாயகத்தின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும், அவர் மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

