விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தடைகளை நீக்கி, வெற்றியை வழங்கும் விநாயகப் பெருமானை வழிபடும் இந்த நாளில், சிலை வாங்குவது, வழிபாடு செய்வது உள்ளிட்ட சில முக்கிய விஷயங்களை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விநாயகரை வழிபட உகந்த நேரம்
விநாயகர் சதுர்த்தி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரையும் விநாயகரை வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலையை எப்படி தேர்வு செய்வது?
விநாயகர் சிலை வாங்கும்போது சில குறிப்புகளை கவனிப்பது வழக்கம். அமர்ந்த நிலையில் இருக்கும் விநாயகர் சிலையை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல், துதிக்கை இடதுபுறமாக வளைந்திருப்பது, சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருப்பது போன்ற அம்சங்களை கவனிக்கலாம்.
மேலும், விநாயகரின் கையில் பிரசாதம் இருப்பது போலவும், அருகில் மூஷிக வாகனம் அமைந்திருப்பது போலவும் உள்ள சிலைகளை தேர்வு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
மஞ்சளில் விநாயகர் செய்வது எப்படி?
வீட்டிலேயே மஞ்சள் விநாயகரை தயாரிக்க விரும்புபவர்கள் மஞ்சள் பொடியுடன் சிறிதளவு மைதா, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து சிலையை உருவாக்கலாம்.
தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்
விநாயகர் வழிபாட்டின்போது தானம் செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
- பழங்கள் தானம்: புத்திக்கூர்மை, தொழில் வளர்ச்சி மற்றும் வம்ச விருத்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
- ஆடை தானம்: உடல்நலம் மற்றும் ஆயுள் பலம் மேம்படும் என கருதப்படுகிறது.
- விளக்கு அல்லது நெய் தானம்: திருஷ்டி நீங்கி, பித்ரு ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
- தேங்காய் தானம்: காரிய வெற்றிக்கும், ராகு-கேது தோஷ நிவர்த்திக்கும் உதவும் என கூறப்படுகிறது.
- மஞ்சள் மற்றும் மாங்கல்யப் பொருட்கள் தானம்: திருமணத் தடைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.
- அன்னதானம்: வறுமை நீங்கி, செல்வ வளம் பெருகும் என்ற ஐதீகம் உள்ளது.
எத்தனை தேங்காய் உடைக்கலாம்?
விநாயகர் வழிபாட்டில் சிதறு தேங்காய் உடைப்பதற்கும் பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன.
1 தேங்காய் – தடைகள் நீங்கும்
3 தேங்காய் – உடல்நலம், தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்றம்
5 தேங்காய் – கல்வியில் சிறந்து விளங்க
7 தேங்காய் – கடன் தொல்லை நீங்க
9 தேங்காய் – குழந்தை பாக்கியம்
11 தேங்காய் – திருமணம் கைகூட
இவை பாரம்பரியமாக பின்பற்றப்படும் ஆன்மிக நம்பிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அருகம்புல் மற்றும் சிவப்பு மலர்களால் அர்ச்சனை
விநாயகருக்கு அருகம்புல் மிகவும் விருப்பமானதாக ஆன்மிக மரபுகளில் கருதப்படுகிறது. விநாயகரின் 108 நாமங்களைச் சொல்லி அருகம்புல் மற்றும் சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்வதும் சிறப்பான வழிபாடாகக் கூறப்படுகிறது.
விநாயகர் வழிபாட்டின் நோக்கம் என்ன?
விநாயகரை வழிபடுவதன் நோக்கம் வாழ்க்கையில் தடைகளே ஏற்படாமல் இருப்பது மட்டுமல்ல. தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் மன உறுதி, புத்திசாலித்தனம், விவேகம் மற்றும் சரியான முடிவெடுக்கும் திறன் கிடைப்பதே கணபதி வழிபாட்டின் முக்கிய நோக்கமாக ஆன்மிக மரபுகளில் பார்க்கப்படுகிறது.
அதனால்தான் எந்தவொரு நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பாக விநாயகரை முதலில் வழிபடும் வழக்கம் பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது.

