விளம்பரம்:


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கங்கையில் இருந்து 1,008 லிட்டர் புனிதநீர்

Meenakshi Temple

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்கான பூர்வாங்க பூஜைகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விளம்பரம்:


செப்டம்பர் 17-ல் கும்பாபிஷேகம்

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் முக்கிய கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நாளான செப்டம்பர் 16ஆம் தேதி காலை 5 மணி முதல் 6 மணி வரை பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கங்கையில் இருந்து புனிதநீர்

விளம்பரம்:


கும்பாபிஷேக சடங்குகளுக்காக கங்கை உள்ளிட்ட நாட்டின் 7 புனித நதிகளில் இருந்து தீர்த்தநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, யாகசாலையில் உள்ள கலசங்களில் பயன்படுத்துவதற்காக கங்கையில் இருந்து 1,008 லிட்டர் புனிதநீர் கொண்டு வரப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த புனிதநீர் யாகசாலை பூஜைகளில் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன.

தொடங்கிய பூர்வாங்க பூஜைகள்

கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் செப்டம்பர் 6ஆம் தேதி சித்தி விநாயகர் சன்னதியில் தொடங்கின. இதில் கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் நடைபெற்றன.
மேலும், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கான அடுத்தகட்ட சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

184 யாக குண்டங்கள்

செப்டம்பர் 11ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக வடக்கு ஆடி வீதியில் 56 யாகசாலைகளும், 184 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 18ஆம் தேதி மண்டல பூஜைகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.21 கோடியில் திருப்பணிகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது சுமார் ரூ.21 கோடி செலவில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கோவிலை சுற்றியுள்ள 58 இடங்களில் வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts