அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ‘Truth Social’ சமூக வலைதளத்தில் நிலவின் புகைப்படத்தை பகிர்ந்து, “The Moon Is Ours” என பதிவிட்டுள்ளார். நிலவின் பின்னணியில் அமெரிக்கக் கொடியும் இடம்பெற்றிருந்தது. டிரம்பின் இந்த பதிவு சர்வதேச அளவில் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது..
நிலவின் மீது உரிமை கோர முடியுமா?
டிரம்பின் இந்தப் பதிவு, அமெரிக்காவின் விண்வெளி ஆதிக்கத்தை வலியுறுத்தும் அரசியல் கருத்தாக பார்க்கப்படுகிறது. ஆனால் சர்வதேச விண்வெளிச் சட்டத்தின்படி, எந்த ஒரு நாடும் நிலவு அல்லது பிற விண்வெளிப் பொருட்களின் மீது இறையாண்மை உரிமை கோர முடியாது.
1967 விண்வெளி ஒப்பந்தம்
1967-ம் ஆண்டின் Outer Space Treaty விண்வெளி, நிலவு உள்ளிட்ட விண்வெளிப் பொருட்களை எந்த ஒரு நாடும் தனது பகுதியாக அறிவிப்பதைத் தடுக்கிறது. அமெரிக்காவும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதால், டிரம்பின் பதிவு சட்டரீதியாக நிலவின் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்காது.
டிரம்பின் சர்ச்சைக்குரிய பதிவுகள்
புவியியல் பகுதிகள் மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து டிரம்ப் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது புதிதல்ல. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாகவும் அமெரிக்க உரிமை குறித்த கருத்துகளை அவர் முன்வைத்துள்ளார். மேலும், நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரை “New America” என மாற்றலாம் என்ற யோசனையையும் அவர் தெரிவித்துள்ளார்.
விண்வெளி ஆதிக்கம் குறித்த விவாதம்
நிலவு குறித்த பதிவுடன், அமெரிக்க Space Force வீரர்களுக்கான புதிய சீருடை வடிவமைப்பையும் டிரம்ப் வெளியிட்டார். சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சீருடை, எதிர்கால விண்வெளிப் படையின் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா நிலவு தொடர்பான ஆராய்ச்சிகளையும் விண்வெளி நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், டிரம்பின் இந்த பதிவு எதிர்கால விண்வெளி ஆதிக்கம் மற்றும் நிலவில் உள்ள வளங்கள் தொடர்பான சர்வதேச போட்டி குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும், சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட இந்த பதிவு மட்டும் நிலவின் மீதான எந்தவொரு சட்டப்பூர்வ உரிமையையும் அமெரிக்காவுக்கு வழங்காது என்பது உன்மையே.

