விளம்பரம்:


ஏ.ஐ. டீப்பேக் தொழில்நுட்பத்தால் நடிகர்களுக்கு அச்சுறுத்தல்: அமித் ஷாவிடம் சிரஞ்சீவி, ராம் சரண் புகார்!

தமிழ் செய்தி டீப்பேக் எச்சரிக்கை ஏ.ஐ. டீப்பேக் தொழில்நுட்பத்தால் நடிகர்களுக்கு அச்சுறுத்தல்: அமித் ஷாவிடம் சிரஞ்சீவி, ராம் சரண் புகார்!

நடிகர்களின் புகைப்படம், குரல் மற்றும் உருவத்தை அனுமதியின்றி பயன்படுத்தி போலி வீடியோக்கள் உருவாக்கப்படுவதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.

ஐதராபாத்: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் டீப்பேக் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதால், அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவியும், அவரது மகன் ராம் சரணும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்:


அமித் ஷாவைச் சந்தித்த சிரஞ்சீவி, ராம் சரண்

ஐதராபாத்தில் நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, சிரஞ்சீவியும் ராம் சரணும் அமித் ஷாவை வரவேற்று மரியாதை செலுத்தினர். அவருக்குப் பூங்கொத்து, சிலை மற்றும் பாரம்பரிய சால்வை ஆகியவற்றை வழங்கினர். இந்தச் சந்திப்பில் மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியும் உடனிருந்தார்.

டீப்பேக் வீடியோக்களால் கலைஞர்களுக்குப் பாதிப்பு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்கள், குரல்கள், உருவங்களை அனுமதியின்றி மாற்றி போலியான வீடியோக்கள் உருவாக்கப்படுவது குறித்து இருவரும் தங்களது கவலையைத் தெரிவித்தனர்.

இதுபோன்ற வீடியோக்கள் கலைஞர்களின் தனிப்பட்ட கண்ணியம், உரிமைகள் மற்றும் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், திரையுலகினருக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

விளம்பரம்:


உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமித் ஷா உறுதி

சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் தெரிவித்த கவலைகளைக் கேட்ட அமித் ஷா, இந்த விவகாரத்தை மத்திய அரசு அவசரமாகப் பரிசீலிக்கும் என்றும், ஏ.ஐ. மற்றும் டீப்பேக் தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கடுமையான தண்டனைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பாக விரிவான விவரங்களுடன் எழுத்துப்பூர்வ மனு அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியிடம் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு திரையுலகினரிடையே கவனத்தைப் பெற்றுள்ளதுடன், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டப் பாதுகாப்புகள் குறித்த விவாதத்தையும் மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

விளம்பரம்:


உங்கள் கருத்து?

Related Posts