கோவையில் இருந்து கார் மூலம் ஈரோடு செல்லும் முதல்வர், பெருந்துறை வழியாகப் பொதுமக்களைச் சந்திக்கிறார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் அரசு விழாவிலும் பங்கேற்கிறார்.
ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (நவம்பர் 3) ஈரோடு மாவட்டத்திற்குச் சென்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், ரோடு ஷோ மூலம் பொதுமக்களைச் சந்திக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் அரசு விழா பெருந்துறையில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, மகளிர் குழுவினர் தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் உதவிகளையும், ரூ.1,110 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சுமார் 9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வங்கி நிதி இணைப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் அமைத்துள்ள கண்காட்சி அரங்குகளையும் முதலமைச்சர் பார்வையிடுகிறார்.
ஈரோட்டில் ரோடு ஷோ: வழித்தட விவரங்கள்
இந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்.
விஜயமங்கலம் பகுதியைக் கடந்து சிப்காட் வழியாகப் பெருந்துறைக்கு வரும் அவர், பெருந்துறை நகர் வழியாக ரோடு ஷோ நடத்தி பொதுமக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
செங்கம்பள்ளி பாலம், பெருந்துறை புறவழிச்சாலை, சிப்காட் ரவுண்டானா, பணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் ஏழு இடங்களில் மக்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோடு ஷோ நடைபெறும் வழித்தடங்கள் மற்றும் அரசு விழா நடைபெறும் இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு விழா முடிந்ததும் பெருந்துறையில் மதிய உணவு அருந்திவிட்டு, அங்கிருந்து சாலை வழியாகக் கோவை விமான நிலையம் சென்று சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரின் இந்தப் பயணம் ஈரோடு மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

