தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளும் தரப்புக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முதலமைச்சர் பேசிய சில கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
முதலமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு
திமுக கொறடா எ.வ.வேலு பேசும்போது, நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் பேசியதாகவும், சர்க்காரியா கமிஷன் அறிக்கை, மிசா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூறப்பட்ட கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். மேலும், மிசா தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.
சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணா
முதலமைச்சரின் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பியதுடன், சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றம்
சபாநாயகர் இருக்கையைச் சுற்றி திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திமுக உறுப்பினர்களில் சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் சட்டப்பேரவை வளாகத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

