இனி 25 நாட்களில் கியாஸ் சிலிண்டர் புக் செய்யலாம்! நகரம், கிராமம் என ஒரே விதிமுறை
45 நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது; பெட்ரோலிய அமைச்சகம் உடனடி அமலுக்கு உத்தரவு
புதுடெல்லி: வீட்டு உபயோக எல்பிஜி கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலுக்கான முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறம், கிராமப்புறம் என வேறுபாடின்றி இந்த புதிய நடைமுறை ஒரே சீராக அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியை தொடர்ந்து, கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலை முன்பதிவு செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
நகரம், கிராமத்திற்கு தனித்தனி காலக்கெடு
அப்போது நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கும் பிறகே அடுத்த கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலை முன்பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலால் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் கியாஸ் விநியோகத்தை சீராக வைத்திருக்க இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எரிபொருள் விநியோகம் சீரானது
தற்போது போர் ஓய்ந்துள்ளதுடன், எரிபொருள் விநியோக நிலைமையும் மேம்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், எல்பிஜி மறு நிரப்பல் நிலுவையும் கணிசமாக குறைந்துள்ளதால், ஏற்கனவே நடைமுறையில் இருந்த முன்பதிவு இடைவெளியை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக அமலுக்கு வருகிறது
இதன்படி, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோருக்கும் 25 நாள் முன்பதிவு இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை மந்திரி சுரேஷ் கோபி, அமைச்சகத்தின் இந்த உத்தரவு தொடர்பான தகவலை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

